நாடெங்கிலும் இருக்கும் கார்ப்பரேட் சாமியார்களை மோடியின் அம்பாஸிடர்களாகத்தான் தேசம் பார்க்கிறது. அவர்களும் அப்படியொரு பிம்பத்தைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அந்த கட்டமைப்பில் நாலு கட்டைகளை நைஸாக உருவி, ஆட்டம் காண வைத்திருக்கிறார் பாபா ராம்தேவ். 

யோகா குரு பாபா ராம்தேவ் பற்றி விளக்க தேவையில்லை. மோடிக்கு மிக நெருக்கமான கார்ப்பரேட் ஆன்மீக குரு-க்களில் இவரும் ஒருவர். ரெண்டு பேரும் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வகையில் செம்ம நெருக்கம். ஆனால் அதெல்லாம் ரெண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஒரேயொரு பேட்டி மூலம் ஒட்டுமொத்த பி.ஜே.பி.யையும் தெறிக்க விட்டிருக்கிறார் பாபா. 

பிரைவேட் டி.வி. சேனல் ஒன்று பாபாவிடம் பேட்டிக்கு  மைக் நீட்ட, மனிதர் பொளந்துகட்டிவிட்டார் இப்படி...”ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த பி.ஜே.பி.யின் நிலை வேறு, இப்போது வேறு. கடந்த தேர்தலில் நான் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். உண்மைதான், ஆனால் சமீப காலமாக நான் அதைப் பற்றி ரொம்பவே யோசித்து ஒரு முடிவெடுத்திருக்கிறேன். தேசத்தில் விலைவாசி மிக கடுமையாக ஏறிவிட்டது. இடை கட்டுப்படுத்த வேண்டிய லகான் மத்திய அரசின் கையில் இருக்கிறது. இந்த விலைவாசி

உயர்வால் மக்கள் படும் இம்சைகளை விளக்கி முடியது. உடனடியாக இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பி.ஜே.பி. மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டியிருக்கும். 

இந்த தேர்தலில் பி.ஜே.பி.யை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட போவதில்லை. அரசியல் என்ற அமைப்பிலிருந்து நான் விலகிவிட்டேன். சர்வ கட்சிக்கும் நான் சொந்தமானவனாக இருக்கிறேன். எல்லா கட்சி நபர்களும் என்னிடத்தில் உள்ளனர் ஆனால் நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை.” 

பாபா போட்ட இந்த அதிரடி எதிர்ப்பு ஆசனம் பி.ஜே.பி.யை நிச்சயமாக கலங்க வைத்துள்ளது. காரணம், நாடெங்கிலும் இருக்கும் இந்த சாமியார்களின் மூலமாக அவர்களின் பல லட்சக்கணக்கான பக்தர்களின் அபிமானத்தையும் பெற்று வைத்திருந்தது அக்கட்சி. ஒரு குரு பின்வாங்குகிறார் என்றால் அந்த வைப்ரேஷன் அடுத்தடுத்த குருவையும் உசுப்பிவிடும். இது கடைசியில் மிகப்பெரிய சரிவை தங்களுக்கு ஏற்படுத்தும் என்று நொந்து கொள்கிறார்கள். 

எந்த தயக்கமுமில்லாமல் மிக நேரடியாகவே மோடிக்கு பாபா ராம்தேவ் சவால்விட்டு, நெருக்கடி கொடுத்துள்ளதன் பின்னணியில் வேறு சில பிரச்னைகளும் இருப்பதாகவும் சில சந்தேகங்கள் எழுகின்றன.
எப்படிப் பார்த்தாலும் இது பி.ஜே.பி.க்கே மைனஸ்!