Not allow to continue the admk govrnment

நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிய அதிமுக அரசு இனியும் தொடரக் கூடாது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாணவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி மே 7 ஆம் தேதி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம் பிடிக்கவில்லை.

பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களில் தலா 3 மாணவர்களும், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒரு மாணவரும் இடத்தை பிடித்துள்ளனர்.

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், இதற்கு மாணவர்கள் மேல் குற்றம் இல்லை எனவும் மாநில அரசின் பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடு தான் காரணம் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள் தனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவும், தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கும் பயிற்சி அளித்து அவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் எனவும், நீட் தேர்வு கிடையாது என அரசியல்வாதிகள் கடைசி வரை மாணவர்களை ஏமாற்றிவிட்ட்தாக குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிய இந்த அதிமுக அரசு இனிமேலும் தொடரக் கூடாது எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.