திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம்! அடித்து துரத்தமாட்டோம்! திமுகவை சீண்டிய கஸ்தூரி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று விளக்கம் அளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படி தமிழ்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி போட்ட டுவீட் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக திமுகவை சீண்டும் வகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாகவும், இதற்கு பயந்து இங்கு பணியாற்றி வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்வதாகவும் செய்தி வெளியானது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பேசும் பொருள் ஆன நிலையில், வைரலாகும் அந்த வீடியோக்கள் போலியானது என தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பீகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று விளக்கம் அளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படி தமிழ்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி போட்ட டுவீட் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.