அதிமுக அரசுக்கு எதிராக கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அரசின் பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டுப் பேசினார். தற்போது பணத்தை எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இனி கம்பி எண்ணுவார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று  சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செயல்பட முடியாத ஒரு தலைவருக்கு தி.மு.க. தலைவர் என்று ஒரு பட்டம் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அவரது மகன் தான் தி.மு.க.வில் முக்கிய பொறுப்புக்கு வர முடிந்தது.

அதேபோன்று ஈரோட்டில் என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் என்.கே.கே.ராஜா ஆகியோர் தான் ஆதிக்கம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தார். இப்போது அவரது மகனும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.

இதைப் போல கருணாநிதிக்கும் பின் அவர் மகன் ஸ்டாலினும், அவருக்குப் பிறகு அவரது மகன் உதயநிதியும்தான்  பொறுப்புக்கு வர முடியும். ஆனால் அதிமுகவைப்  பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராகவிட முடியும் என தெரிவித்தார்.

இது குறித்து தனது டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், வரிசையில் நிற்கிறேன்.. கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் பின்னால் தலைவனாய் அல்ல அவனுக்கும் தொண்டனாய் சேவையாற்றவே !  என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடிவருடிகளும், முதுகெலும்பில்லாத அடிமைகளும் எங்களது இயக்கத்தைப் பற்றிப் பேச துளி கூட தகுதி இல்லை என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினை நீ… வா..போ.. என ஒருமையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.