உத்தர பிரதேசத்தில் அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும் கலவரமாக உருவெடுத்தது. 

மேலும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் தீ வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் வன்முறையாளளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். 

இதனையடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சொத்து பறிமுதல் செய்வது தொடர்பாக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.


உத்தர பிரதேச அரசின் எதிர்பாராத இந்த அதிர்ச்சி வைத்தியம் காரணமாக, அதன் பிறகு போராட்டங்கள் நடைபெறவில்லை. 

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ராமர் கோயில் கட்ட பாதை வழிவகுத்த பிறகு, எனது மாநிலத்தில் எந்தவொரு வன்முறையும் நிகழவில்லை. 

 

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கலவர சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கியது.ஆனால் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்தோம். அதனால் தற்போது அங்கு வன்முறை, போராட்டங்கள் நடைபெறவில்லை. 

அதற்கு பதிலாக குற்றவாளிகள் மன்னிப்பு கேட்கின்றனர். அது போன்ற மக்களின் உண்மை முகத்தை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களை எனது அரசு ஒட்டியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.