நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையில்  இன்று  கேள்வி நேரம் முடிந்த பிறகு நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும். அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதனை நிறைவேற்ற வேண்டும். 

27 மாதங்களாக கிடப்பில் போட்டு தற்போது நிராகரித்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது போலதான் மாநில அரசுக்கு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்த மத்திய அரசின் செயலைக் கண்டிக்க வேண்டும் என பேசினார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , சட்டமன்ற தீர்மானங்களை பரிசீலிப்பது குடியரசுத் தலைவரின் பணி. எனவே மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கருத்தை கேட்டறிந்து மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என கூறினார்.