வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்,  மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.
 
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியிலும், சேலம் தொகுதியில் தங்கபாலு மற்றும் மோகன் குமாரமங்கலம், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது மருமகள்  ஸ்ரீநிதி ஆகியோர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இதே போல் இன்னும் சில முக்கிய தலைவர்களும் சீட் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் காங்கிரஸ் மாநில தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள் தலைவர்களின்   வாரிசுகளுக்கு தேர்தலில் சீட் வழங்கக் கூடாது  என்று ராகுல் காந்தி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

அதே நேரத்தில் புதிய முகங்களுக்கு  குறிப்பாக இளைஞர்களுக்கு சீட் வழங்கும் முடிவை காங்கிரஸ் கோர் கமிட்டி முடிவெடுத்துள்ளது. தமிழகத்திலும் இந்த ரூல்சை கடைப்பிடிக்க வேண்டும் என ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக திருநாவுக்கரசர், இளங்ககோவன், தங்கபாலு போன்றோர் வேறு ஏதாவது வழி கிடைக்குமா என தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.