தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சில அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், அதனால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏதுவாக மத்திய அரசு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி சென்றார். அவர் பகல் 12 மணி அளவில் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ்கோயலை ரெயில்வே அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்.அப்போது அவரிடம் தமிழகத்துக்கான நிலக்கரி ஒதுக் கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத் டாந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனல் மின்நிலையங்களில் எப்போதுமே 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைத்திருப்போம். கடந்த வாரம் ஒடிசாவில் மழை பெய்ததால் நிலக்கரியை கொண்டுவருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

இதனால் நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டது. தற்போது வடசென்னை அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கும் தேவையான நிலக்கரி இருக்கிறது. இதையடுத்து அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நிலக்கரி வேண்டும் என கோரிக்கை விடுத்தாக தெரிவித்தார்.

இதையடுத்து  30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் நாள் தோறும் 72 ஆயிரம் டன்  நிலக்கரியை நாள்தோறும் தமிழகத்துக்கு அனுப்புவதாகவும் கோயல் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மினவெட்டுக்கே வாய்ப்பில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.