no place for bjp in tamilnadu said thambidurai

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சியமைக்குமே தவிர பாஜகவிற்கு இடம் கிடையாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெறவில்லை. மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகத்தான் அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

ஆனால் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுகிறதே தவிர, கட்சிகளுக்கு இடையே எந்தவிதமான கூட்டணியோ உடன்பாடோ கிடையாது எனவும், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் தமிழக ஆட்சியாளர்கள் விளக்கமளித்து வந்தனர். 

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்வினையாற்றினர். 

தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற பாஜகவின் இலக்கிற்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதில் முதன்மையான மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பாஜக முனைகிறது. 

பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வந்தன. ஆனால் அதிமுக அதிலும் பெரிய எதிர்ப்புகளோ, கடுமையான பதிலடிகளோ கொடுத்ததில்லை. பட்டும்படாமல் விமர்சித்து வந்தனர். ஆனால் தமிழகத்தில் கிறிஸ்டி நிறுவனம், எஸ்பிகே கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் அடுத்தடுத்து நடந்த வருமான வரி சோதனைக்கு பிறகு, தமிழக ஆட்சியாளர்களின் எதிர்க்குரல்களும் கருத்துகளும் வலுத்து ஒலிக்கின்றன. 

நேற்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்த நிலையில், இன்று அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழகத்தில் ஆட்சியமைக்க பாஜக விரும்புகிறது. அதற்காக பாஜகவினர் தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் பாஜகவிற்கு இடமில்லை. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.