கொரோனா ஆய்வுப் பணிகளுக்கு செல்லும் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இரு வாரங்கள் ஆக உள்ளன. இந்நிலையில் சென்னையிலேயே தங்கி கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் தினந்தோறும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக வெவ்வேறு மாவட்டங்களுகும் சென்று ஆய்வுப் பணிகளை நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். 
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை நாளை (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன். இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் கழக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.