no one is dead due to dengue in dindigul

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தினமும் சராசரியாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய மருத்துவர் குழுவும் தமிழகத்தில் ஆய்வு செய்து வருகிறது.

டெங்குவால் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இறந்துவரும் நிலையில், டெங்குவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தது ஏற்கனவே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் டெங்குவிற்கு யாருமே பலியாகவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருப்பது மக்களிடையே அமைச்சர்களின் மீது கொஞ்சம் இருந்த மரியாதையை மேலும் இறக்கியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை. வைரஸ் காய்ச்சல் காரணமாக நான்கு பேர் இறந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் வார்ட்டில் படுக்கக்கூட இடம் இல்லாமல், தரையில் தங்கி சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நோயாளிகள் கூட்டம் கூட்டமாக தங்கியிருக்கிறார்கள். இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குவிற்கு 36 பேர் பலியாகியிருக்கிறாரக்ள். 

இந்த சூழ்நிலையில் டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என அமைச்சர் கூறியது நோயாளிகளிடத்திலும் மக்களிடத்திலும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் பேட்டிக்கொடுத்து முடித்த அரைமணி நேரத்தில் வத்தலகுண்டு அருகேயுள்ள நடக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்.

டெங்குவால் மக்கள் இறந்துமடியும் நிலையில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தாங்கள் அமைச்சர்கள் என்பதையும் மறந்து வாயில் வருவதை எல்லாம் பிதற்றுகிறார்கள். கண்முன்னே டெங்குவால் மக்கள் இறந்துகொண்டிருக்கும் சமயத்தில் டெங்குவால் யாரும் இறக்கவில்லை என அப்பட்டமாக பொய் கூறுகிறோமே.. நமக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் யோசிக்கமாட்டார்களா? என்ற நினைப்பெல்லாம் அவர்களுக்கு கிடையாது. அந்தந்த நேரத்தில் சமாளிப்பதாக நினைத்துக்கொண்டு வாயில் வருவதை எல்லாம் பேச்சாக பேசிவிட்டு போகிறார்கள். இவர்களெல்லாம் அமைச்சர்களா? இவர்களுக்கா வாக்களித்தோம்? என்ற ஆதங்கத்திலேயே மக்களுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது.

முழு பூசணியை சோற்றில் மறைக்கும் காரியம் என தெரிந்தும் அப்பட்டமாக அமைச்சர்கள் பொய் கூறுகின்றனர். முதலில் தாங்கள் அமைச்சர்கள் என்பதை உணர்ந்து மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஆதங்கமாக கருத்து தெரிவிக்கின்றனர்.