வன்னிய மக்களிடம் பகிரங்கமாக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், அத்துடன் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கத்தின் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மற்றும் ஓடிடி தளமான அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சூர்யாவுக்கு எதிராக யாராலும் எதையும் செய்ய முடியாது என்றும், அவருக்கு எப்போதும் எதுவும் ஆகாது என்றும் பிரபல இயக்குனர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருமான கோபி நயினார் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் பட விவகாரத்தில் தொடர்ந்து பாமகவினர் சூர்யாவை மிரட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம், இந்தப் படம் பழங்குடியின சமூக மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிகார வெறிக்கு அம்மாக்கள் இரையாவதை ஒரு உண்மை சம்பவத்துடன் தொடர்பு படுத்தி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது ஜெய்பீம், அதே நேரத்தில் இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளதாக கூறி பாமகவினர் சர்ச்சை எழுப்பியுள்ளனர். அதேபோல் இந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமாக அக்னிசட்டி காட்டியிருப்பதும் திட்டமிட்டே வன்னியர்களை இழிவுபடுத்தும் செயல் எனகூறி சூர்யாவுக்கு எதிராக பாமக உள்ளிட்ட வன்னிய ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

வன்னிய மக்களிடம் பகிரங்கமாக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், அத்துடன் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கத்தின் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மற்றும் ஓடிடி தளமான அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் அன்புமணி எழுதிய கடிதத்திற்கு சூர்யா பதில் கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இயக்குனர் பாரதிராஜா, நடிகர் டி. ராஜேந்தர் ஆகியோரும் சூர்யாவை விமர்சிப்பதை நிறுத்தும்படி பாமகவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வரிசையில் அறம் திரைப்படத்தின் இயக்குனரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான கோபி நயினார் எப்போதும் தங்களின் ஆதரவு சூர்யாவுக்கு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு தமிழ்த் திரையுலகில் இருந்து ஆதரவு குரல் ஓங்கி ஒலிக்க வில்லையே என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:- இங்கு எல்லாமே வர்த்தக மயமாகி விட்டது. விடுதலை அரசியல் குறித்து கலை வடிவத்திற்கு அது தொடர்பான அரசியல் பயிற்சி இருந்தால்தான் ஆதரவு உருவாகும். ஆனால் அந்த அரசியல் பயிற்சி இல்லை, திரையுலகினரின் மொத்த வாழ்க்கையும் வணிக படுத்தப்பட்டுள்ளது. சினிமா என்பது வணிக வாழ்க்கை ஆக மாறியிருக்கிறது. அது ஒரு கலை வாழ்வாக மாறவில்லை, ஒரு வேளை நாம் ஏதாவது கருத்து கூறினால் சூர்யாவுக்கு ஏற்பட்ட சூழல் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்கூட ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அச்சம் இருக்கும் வரை நாம் ஒரு மெஷினாக இருக்கலாமே தவிர ஒரு மனித வாழ்க்கைக்கு ஆதரவான கலைஞராக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

எத்தனை பேர் தடுத்தாலும் சூர்யா போன்ற கலைஞர்கள், படத்தை இயக்கிய இயக்குனர் போல இன்னும் நிறைய பேர் வந்து கொண்டே இருப்பார்கள். இதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லும், இதை தடுக்கவே முடியாது. இதை பெருக்கும் வேலையை அமைப்புகள் செய்யும், என்னை மீட்க ஒருவன் வருவான் அவன் பேசும்போது அவனுடன் நான் அணிதிரள்வேன். அணி திரள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் திரைப்படங்களும் கலைஞர்களும் உருவாக்குவார்கள். அது நடந்தே தீரும், அதை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அனைத்தும் மாறும்போது எல்லாம் மாறும், சூர்யாவுக்கு எப்போதும் எதுவும் ஆகாது, சூர்யாவுக்கு எதிராக யாராலும் எதுவும் செய்ய முடியாது. எப்போதும் என்னுடைய ஆதரவு அவருக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.