மறைந்த ஜெயலலிதா உருவாக்கிய இந்த அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும், அவர் சொன்னதைப் போல நூற்றாண்டுகள் இந்த ஆட்சி தொடரும்  என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில் அடுத்த வாரத்தில் கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பந்தகால் நட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மறைந்த ஜெயலலிதா உருவாக்கிய இந்த அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும், அவர் சொன்னதைப் போல நூற்றாண்டுகள் இந்த ஆட்சி தொடரும்  என்றும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகச் சிறப்பாக இந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இந்த ஆட்சியை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.