Biorxiv இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையின் படி, நியோகோவ் மற்றும் அதன் இணை வைரஸ் Pdf-2180-cov மனிதர்களை பாதிக்கலாம். வுகான் பல்கலைக்கழகம் மற்றும் சீன அகாடமி ஆப் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி மனித உயிரணுக்களை பாதிக்க இந்த புதிய கொரோனா வைரசில் ஒரே ஒரு பிறழ்வு மட்டும் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.
இதுவரை பரவி வந்த வைரஸ்களை காட்டிலும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என வூகான் ஆய்வாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ள நியோகோவ் வைரஸ் குறித்து இப்போதைக்கு கவலைப்பட தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. சுமார் 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி தன்னை தகவமைத்து மனித சமூகத்தை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் ஒமைக்ரானுக்கு பிறகு இப்போது கொரோனாவின் புதிய மாறுபாடு நீயோகோவ் உருவாக்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் அதிக கவலையில் ஆழ்ந்துள்ளன. இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள வூகான் விஞ்ஞானிகள் இந்த புதிய மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் தொற்று மற்றும் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கும் என்றும், ஒவ்வொரு மூன்று நோயாளிகளில் ஒருவர் இந்த வைரசால் உயிரிழக்கு நேரிடும் என்றும் வூகான் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சீன விஞ்ஞானிகளின் இந்த கூற்று குறித்த உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து மேலும் அதிகப்படியான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றும், அது தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சாமானிய மக்களை எந்த அளவிற்கு தாக்கும் என்பது குறித்தும் ஆய்வு அவசியம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தொடர்ந்து இந்த வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் WHO அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் கருத்துப்படி, இந்த மாறுபாடு என்பது புதியது அல்ல, இந்த மாறுபாடு மார்ஸ்-கோவ் வைரஸ் உடன் தொடர்புடையது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகள் முதலில் 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்டனர். இந்த நியோகோவ் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் வவ்வால்களில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்பு இந்த வைரஸ் விலங்குகளின் மட்டுமே காணப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.
Biorxiv இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையின் படி, நியோகோவ் மற்றும் அதன் இணை வைரஸ் Pdf-2180-cov மனிதர்களை பாதிக்கலாம். வுகான் பல்கலைக்கழகம் மற்றும் சீன அகாடமி ஆப் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி மனித உயிரணுக்களை பாதிக்க இந்த புதிய கொரோனா வைரசில் ஒரே ஒரு பிறழ்வு மட்டும் தேவை எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ரஷ்யாவின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி துறை தற்போது இந்த மாறுபாட்டின் சாத்தியம் மனிதர்களுக்கு பரவுவது குறைவு என்றும் கூறியுள்ளது. ஆனால் அதன் சாத்தியம் மற்றும் ஆபத்தை நாம் ஆராய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஒமைக்ரானின் மற்றொரு துணை BA-2 வைரஸ் அதிக கவலை கொள்ளச் செய்துள்ளது. ஆர்டி பிசிஆர் சோதனைகள் மூலம் கூட அதைக் கண்டறிய முடியாததால் ஒமைக்ரானின் துணை மாறுபாடு அதிக ஆபத்தை தர வல்லதாக உள்ளது. இதுவரை இந்த புதிய துணை மாறுபாடு வைரஸால் இந்தியா உட்பட 40 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாறுபாடு உலகின் பிற நாடுகளுக்கும் பரவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் நியோகோவ் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு, ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நியோகோவ் பற்றி தற்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் குறித்து உலகிற்கு எச்சரித்துள்ள சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
