அரசைப் பார்த்து ஜீயர்கள் என்ன கூறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஜீயர்கள் ஆதினங்கள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேச குரலுக்கு இந்த அரசு எதிர்வினை ஆற்றாது என்றும், அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசைப் பார்த்து ஜீயர்கள் என்ன கூறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஜீயர்கள் ஆதினங்கள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேச குரலுக்கு இந்த அரசு எதிர்வினை ஆற்றாது என்றும், அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைத்தது முதல் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டி வருகின்றனர், ஆனால் பாஜக-அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எடுத்து வரும் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்கள் மக்களால் வரவேற்கப்பட்டாலும், சில பாஜக, இந்து அமைப்பினரால் விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பட்டினப் பிரவேசம் அதாவது பல்லக்கு தூக்குதல் நிகழ்ச்சி நடைபெறும் என தருமபுர ஆதினம் அறிவித்துள்ளது. இதற்கு அரசு தடை விதித்தது, ஆனால் மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் இந்து விரோதமான செயல்களை கடைப்பிடித்தால் ஆளுங்கட்சியின் எந்தவொரு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது என எச்சரித்திருந்தார். மேலும் பட்டினப்பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று, ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில் ஆச்சாரியாருக்கு நடத்திய பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தினர்.
பட்டின பிரவேசத்தை தடுக்கக்கூடிய அருகதை அரசுக்கு இல்லை, எந்த இயக்கத்திற்கும் கிடையாது என ஆவேசமாக கூறினார். அதேபோல் இந்து தர்மத்திற்கு எதிரான துரோகிகளை தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையானது. திராவிட இயக்கத்தினர் மன்னார்குடி ஜீயரின் இந்த பேச்சை கண்டித்து வருகின்றனர். அரசுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுக்கு எதிராக ஜீயர்கள் எந்த மாதிரியான கருத்துக்களை கூறினாலும் இந்த அரசு அதற்கு எதிர்வினை ஆற்றாது என பின் வாங்கும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜீயர்கள், ஆதினங்கள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேசக் குரலுக்கு இந்த அரசியல் எதிர்வினை ஆற்றாது.

ஆனால் அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுப்போம் ஒருபோதும் வசை பாடியவர்கள் என்று பாராது, அவர்களும் ஆளும் அரசை வாழ்த்தும் அளவிற்கு செயல்படுவோம் என்றார். அமைச்சர் சேகர்பாபு பெரம்பூர் கோவிலில் ஆய்வு செய்தபோது செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் திடீரென பங்கேற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜியர் தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்திற்கு அனுமதி அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறும் போது சக வீரர்கள் அவர்களை தூக்கி சுமப்பது போல தான் சிஷ்யர்கள் ஆதினங்களை சுமக்க நினைக்கிறார்கள் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார்.
அதாவது அரசுக்கு எதிராக சமூக வலைத் தளத்தில் கருத்து பதிவிட்டு வருபவர்கள் மீது அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜியர்களை அரசை கடுமையாக விமர்சித்தும் எச்சரித்தும் உள்ள நிலையில், அவர்கள் தெரிவிக்கும் ஆவேச குரலுக்கு அரசு எதிர்வினை ஆற்றாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
