பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, மழைநீர் தேக்கம் முற்றிலுமாக குறைந்துள்ளது குறித்தும், பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அனைத்து சேவை துறைகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. அதில் தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மாவட்ட வருவாய்த்துறை, தென்னக ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் அவர்கள் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படியும், பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், நீர்நிலைகளை தூர்வாரி புனரமைத்தல் மற்றும் கால்வாய்களையும் நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு, சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் மூலம் 105 நீர்நிலைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, தற்போது நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 70  நீர்நிலைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 8 நீர் நிலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள 27 நீர்நிலைகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இப்பணிகள் நிறைவு பெற்றால் டிஎம்சி அளவுக்கு நீரை சேகரிக்க முடியும். 

கடந்த ஆண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இல்லங்கள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பருவமழை காலங்களில் மழை நீரை சேகரிக்க, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியும், சென்னை குடிநீர் வழங்கல் வாரியமும் இணைந்து மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று சென்னையில் பராமரிப்பின்றி இருந்த 311 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றை தூர்வாரும் பணிகள் நடைபெற்று அருகில் உள்ள தெருக்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மழைநீர் சேகரிப்பு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் வெள்ளம்  மற்றும் நீர் தேக்கத்தை குறைக்க தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாக அமைச்சர் அவர்களின் முயற்சியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் அடையாறு கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றுப் பகுதிகளில் மழைநீர்  வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளன.  

அடையாறு மற்றும் கூவம் பகுதிகளில் 1387 கோடி மதிப்பீட்டில் 409 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவு நீர் தேக்கமடையக்கூடிய இடங்களாக 2015 ஆம் ஆண்டு 306 இடங்களும், 2017 ஆம் ஆண்டு 205 இடங்களும், 2018 ஆம் ஆண்டு 53 இடங்களும், 2019ஆம் ஆண்டு 19 இடங்கள் என கண்டறியப்பட்டு தற்போது நீர்த்தேக்கம் அடையும் இடங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மூலம் அதிக மழை நீர் தேங்க வாய்ப்புள்ள 16 சுரங்கப் பாதைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, மழை நீர் தேங்கும் வாய்ப்பு தற்போது இல்லை.

மேலும் மழைநீர்வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் விரைந்து பணிகள் மேற்கொண்டு தண்ணீர் தடையில்லாமல் செல்கின்ற வகையில்  இணைப்புகள் ஏற்படுத்திடவும்,  மழைநீர்வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திடவும் மழைக்காலங்களில் பல்வேறுவிதமான தொற்றுநோய்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், அவைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தவும், அனைத்து துறை அலுவலர்களும், பருவமழை காலத்தில் இணைந்து பணியாற்றி வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் உள்ள மின்சார கேபிள்களை, தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மெட்ரோ ரயில் நிறுவனத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்பு இருப்பின் அவற்றை வெளியேற்ற தேவையான நீர் இறைக்கும் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.