இப்போது நடக்கிற ரெய்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வாடிக்கையாகிவிட்டது. ரெய்டு அஸ்திரங்களை ஏவிவிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மிரட்டி விடலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
ஆயிரம் நெருக்கடிகளை கொடுத்தாலும் அதிமுக தொண்டர்களை அசைத்துப் பார்க்க முடியாது என அதிமுக கோவை இளம்பெண் இளைஞர் பாசறை செயலாளர் சோனாலி பிரதீப் கூறியுள்ளார். கொங்கு மண்டலத்தை பொருத்தவரையில் அது அதிமுகவின் கோட்டை என்றும், கோவை எப்போதும் நம்பிக்கை நட்சத்திரம் எஸ்.பி வேலுமணியின் கோட்டை தான் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தயாரித்து அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போதே, திமுக ஆட்சி அமைத்தால் ஊழலில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தங்கமணி, வேலுமணி, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து சோதனை நடந்து வருகிறது. நடத்தப்படும் சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு உள்ளிட்ட 59 இடங்களில் சென்னை, கோவை உட்பட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118. 506 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கம் மற்றும் கிரிப்டோகரன்சியில் 34 லட்சம் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. அதாவது எஸ்.பி வேலுமணி நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதேபோல் எஸ்.பி வேலுமணி சகோதரர் அன்பரசன், மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், சந்திரபிரகாஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
அப்போது எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு ஏராளமான அதிமுகவினர் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அதிமுக கோவை இளம்பெண் இளைஞர் பாசறை செயலாளர் சோனாலி பேட்டி ஒன்று கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், இப்போது நடக்கிற ரெய்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வாடிக்கையாகிவிட்டது. ரெய்டு அஸ்திரங்களை ஏவிவிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மிரட்டி விடலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனநிலையை குலைத்துவிடலாம் என திமுக முயற்சிக்கிறது. நீங்கள் எத்தனை ரெய்டு அஸ்திரங்கள் எடுத்தாலும், எத்தனை பிரச்சினைகளை கொடுத்தாலும் அதிமுக என்பது மாபெரும் ஒரு இயக்கம் அதை அசைத்துகூட பார்க்க முடியாது.

கோவை மண்ணை பொருத்தவரையில் அதிமுக மக்கள் கோட்டையாக உள்ளது. வேடிக்கை ரெய்டு நடத்த வந்த அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதேபோன்ற அத்துமீறலைதான் தேர்தல் நேரத்திலும் செய்தார்கள். முறையற்ற முறையில் தேர்தலை சந்தித்து பொய்யான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இப்போது இரண்டாவது முறையாக கோவை மண்ணின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எஸ்.பி வேலுமணியுடன் நாங்களும் நிற்போம். ரெய்டு அஸ்திரத்தை ஏவி எங்களை பயமுறுத்தலாம் என திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம். அதிமுக சிதைந்துவிடவில்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
