மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் திமுகவுக்கு அழைப்பு வந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று திமுக தரப்பு தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு வந்ததாக சொல்லப்படும் அழைப்பும் பொய் என்று பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நாளை மாலை 7 மணிக்கு டெல்லியில் பொறுப்பேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளார்கள். இந்த விழாவில் 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பதவியேற்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பு ஆனது. தேர்தல் பிரசாரத்தில் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’என்று கமல் பேசிய பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும்கூட இதற்கு பதில் அளித்தார்.
இந்நிலையில் கமலுக்கு பாஜக அழைப்பு விடுத்ததை அரசியல் நாகரீகமாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக வெளியான செய்தியைப் பரப்பியது யார் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில், “ மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  “பொய் செய்திகளை சொல்லிகொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே?” எனவும் நாராயணன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது பற்றியோ அதன் உண்மை தன்மையைப் பற்றியோ மக்கள் நீதி மய்யம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதேபோல திமுகவுக்கு வந்ததாக சொல்லப்பட்ட அழைப்பும் உண்மையில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.