நாளை  அதாவது  ஜூலை 15  ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை  தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அண்மையில் அறிவித்து அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து காமராஜர் பிறந்த நாளான நாளை பள்ளிக்கூட  மாணவர்களிடையே போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி விழாவாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமையாக உள்ளதால் அன்று விடுமுறை அளித்துவிட்டு மற்றொரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படும் என மாணவர்களும், பெற்றோர்களும் நினைத்திருந்தனர். 

ஆனால் திடீரென  ஞாயிற்றுக்கிழமையான நாளைக்கே காமராஜர் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கட்டாய உத்தரவிட்டுள்ளது..

பள்ளிகளுக்கு விடுமுறை தினமான ஞாயிறு அன்றும் பள்ளிகளைத் திறந்தே ஆக வேண்டும் என்ற அறிவிப்பு பெற்றோரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கட்டாயம் நாளை  பள்ளிகள் செயல்படும். அன்று அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து விழா நடத்திட வேண்டும் என சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.

நாளை விடுமுறை நாள் என்பதால் ஓய்வெடுக்கும் மனநிலையில் இருந்த மாணவர்களும், பெற்றோர்களும் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.