சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைத் தவிர்த்தல் ஆகிய இலக்குகளைக் கொண்டு மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மக்களவையில் கடந்த ஜூலை 23ம் தேதி இந்த மசோதா நிறைவேறியது. 

மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு 108 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியது. எதிர்ப்பாக 13 எம்பிக்களே வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதத் தொகை 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவேகமாக வாகனத்தை ஓட்டினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

ஹெல்மட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் அபராதத் தொகை 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கான அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சிறுவர்கள் வாகனம் ஓட்டி சாலை விதிகளை மீறினால், பெற்றோருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.சிறுவர் சட்டப்படி வாகனத்தை ஓட்டிய சிறுவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

வாகன உற்பத்தி செய்யும் நிறுவனம் வாகனத்திற்கான விதிகளை கடைபிடிக்காவிட்டால் 100 கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் இந்த அபராதத் தொகை பத்து சதவீதம் அதிகரிக்கப்படும். விபத்துகள் நேரிட்டால் காயம் அடைந்தவர்களுக்கு, கோல்டன் ஹவர் எனப்படும் அவசரகால சிகிச்சையை இலவசமாக வழங்கவும் சட்டத்திருத்தம் வகைசெய்கிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிவோருக்கு காவல்துறையால் பிரச்சினை வராமல் இருப்பதற்காக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களுக்கான காப்பீட்டுத் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் இத்தொகையை ஒருமாதத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கவும் சட்டம் வகை செய்யும். 

அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயாகவும், படுகாயங்களுக்கான இழப்பீடு 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்கிறது. போலி லைசன்சுகளைத் தவிர்க்க ஓட்டுனர் உரிமங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

சாலையில் செல்லும் தகுதியில்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இப்படி பல திருத்தங்களை செய்து நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட உள்ளது.