மதுரையில் மதிமுக தொண்டர் ரவி தற்கொலை செய்து கொண்டதை கொச்சைப்படுதும் வகையில் அரசின் உதவி கேட்டதாக வந்த செய்தியை வன்மையாக கண்டிப்பதாகவும், அரசின் உதவி எதுவும் தேவை இல்லை என்றும் அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி கடந்த மார்ச் 31 ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக தொண்டர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் மேடையில் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, நடைபயணத்தில் கலந்துகொண்ட மதிமுக நிர்வாகி சிவகாசியைச் சேர்ந்த ரவி என்பவர் திடீரென தீக்குளித்தார். இங்கும் அங்கும் ஓடிய அவர் மீது, அருகில் இருந்தோர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதையடுத்து அவரை மதுரை அப்போலோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த ரவிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். உயிரிழந்த நிர்வாகிக்கு மருத்துவமனைக்கு சென்று வைகோ அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், உயிரிழந்த ரவியின் மனைவி முத்துலட்சுமி எழுதிய கடிதம் ஒன்றை மதிமுக தலைமை செயலகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகாசி அ.ரவி நியூட்ரினோவை எதிர்த்து மதுரையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் அரசு உதவி கேட்டதாக என் கணவரின் தம்பி முருகன் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், வைகோ தலைமையில் நடைபெறும் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் என் கணவர் தீக்குளித்து தன் நோக்கத்தை மரண வாக்குமூலமாக நீதிபதியிடமும் கொடுத்தார். என் கணவரின் உயிர்த் தியாகத்தை எண்ணி வைகோ எங்கள் குடுமபத்தைக் காப்பாற்றுவார். அரசின் உதவி எதுவும் தேவை இல்லை என முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.