யாரை தீவிரவாதிகள் என அழைக்கிறீர்களோ, அவர்கள்தான் இந்த நாட்டின் வளம் அளிப்பவர்கள். விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என ராகுல்காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். 

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்துடன் காங்கிரஸின் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரின் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தனர். பின்னர், டெல்லி விஜய் சவுக் பகுதியில் இருந்து ராகுல் தலைமையில் ஏராளமானோர், பேரணியாக சென்று, குடியரசுத் தலைவரை சந்திக்க தயாராகினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த, காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி;- வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என தெரிவித்தேன். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை,விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை பிரதமரிடம் தெரிவித்து கொள்கிறேன்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நிற்கும். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வசதி படைத்தவர்கள் அல்ல. விவசாயிகளுக்கு முன்னர் எந்த சக்தியும் நிற்கமுடியாது. யாரை தீவிரவாதிகள் என அழைக்கிறீர்களோ, அவர்கள்தான் இந்த நாட்டின் வளம் அளிப்பவர்கள். விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாய அமைப்பை அழித்து விடாதீர்கள். 

நாடு ஆபத்தான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. ஜனநாயக இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மொத்த அரசும் மூன்று, நான்கு நபர்களுக்காக மட்டுமே இயங்கி வருகிறது என விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. அரசு உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், பெருமளவு வேலையிழப்பு ஏற்படும். நாட்டில் அனைத்து தரப்பினரும் போராடி கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.