கொரோனா நோய்த்தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கும் என்பதற்கு சரியான மருத்துவ ஆதாரங்கள்  ஏதுமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் செலுத்துவது தான் இந்த சிகிச்சையாகும். இதன்மூலம் கொரோனாவில் இரு்து மீண்டவர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர உதவும். சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இந்த சிகிச்சைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரியிருந்தது. 

இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரி லாவ் அகர்வால் கூறுகையில் பிளாஸ்மா சிகிச்சை என்பது இதுவரை உறுதி செய்யப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

பிளாஸ்மா சிகிச்சை குறித்த கூடுதல் ஆய்வு தேவையப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புதல் வரும் வரை பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம். அப்பாடி செய்தால் அது கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட வாய்ப்புண்டு. கொரோனா நோயாளிகள் சிலருக்கு உயிருக்கு ஆபத்தையும் இந்த சிகிச்சை ஏற்படுத்தி விடும். பிளாஸ்மா சிகிச்சை செய்வது தற்போதைய நிலையில் சட்டவிரோதமாகும். எனவே பிளாஸ்மா சிகிச்சை செய்வதை தற்போதைய சூழலில் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.