சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த எம்எல்ஏ கருணாஸ் சாதி வெறியைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாகவும், காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்தாகவும் கூறி இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை  ஊர்வலத்தின்போது, பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், போலீசாருக்கு மிரட்டல் விடுத்தும் பேசினார். மேலும் இந்து அறநிலையத்துறையில் பணி புரியும் ஊழியர்களையும் கேவலமாகப் பேசினார்.

எச்.ராஜா மீது தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடவில்லை. இதனால் கருணாசுக்கு ஒரு நீதி, ராஜாவுக்கு ஒரு நீதியா ? என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது குறித்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் தேனியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சட்டம், ஒழுங்கு கெடும் வகையில் கருணாஸ் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் ஓபிஎஸ் கூறினார்.

எச்.ராஜா குறித்து பேசிய அவர், அவருக்கு எதிராக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அப்படி கிடைத்தால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். மெய்யபுரத்தில் எச்.ராஜா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், ஆதாரம் இல்லை என துணை முதலமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.