பொதுவாக அரசு அதிகாரிகள் என்றாலே அவர்கள் லஞ்சம் வாங்குகிறவர்கள் என்ற அவப் பெயர் இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில அதிகாரிகள் இதற்கு விதி விலக்காக இருக்கிறார்கள். 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் லஞ்சம் வாங்காத அதிகாரிகளுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார்கள். அவர் தனது அறையில் “ லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் “  என எழுதி வைத்து பொது மக்களிடையே நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

ஆனால் சில நியாயமான அதிகாரிகளுக்கு ஏற்படும் துயரம் சொல்லி மாளாது. அண்மையில் தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் தாலுகா அலுவலக பெண் தாசில்தார் விஜயா ரெட்டி , கடந்த சில வாரங்களுக்கு முன் விவசாயி ஒருவருக்கு பட்டா மாறுதல் வழங்க மறுத்துள்ளார். அந்த விவசாயி பட்டாவை பெறுதற்கு தகுதியில்லாதவர் என்பதால் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த விவசாயி விஜயா ரெட்டியை அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

இந்த சம்பவத்தை அறிந்து பீதியில் உறைந்து போன உமா மகேஷ்வரி என்ற பெண் தாசில்தார் தனது அலுவலக அறை முன்புறமாக கயிறு கட்டி அதன் பின்னால் இருந்து பொதுமக்களிடம் மனுவை பெற்றார். இப்படி நேர்மையான அதிகாரிகளுக்கு  பாதகங்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் அசோக் என்ற மின்வாரிய தலைமை கோட்ட பொறியாளர் தனது அலுவலகத்தில் ' நான் லஞ்சம் வாங்காதவன்' என்ற அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.