டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தான லட்சுமியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கியதாக புகார் எழுந்தது.

இப்பிரச்சனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு தற்போது சலுகைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்தின் மனைவியும், டி.டி.வி.தினகரனின் மாமியாருமான சந்தான லட்சுமி நேற்று காலமானார்.

இதையடுத்து சந்தான லட்சுமியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா சிறையில் இருந்து பரோலில் வரு வாய்ப்புள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பரோலில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த ஜெயில் கண்காணிப்பாளர், இறந்தவர் சசிகலாவின் ரத்த சொந்தம் இல்லை என்பதால் பரோலில் செல்ல அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.