நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. பாஜக மீது நாடு முழுவதும் வெறுப்பு இருந்தாலும் அதை காங்கிரஸ் கட்சி இன்னும் பயன்படுத்தாத நிலையே உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அது ஏமாற்றத்திலேயே முடிந்து விடுவதாக கூறப்படுகிறது. 

உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் செல்வாக்குள்ள பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பாஜக எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான நிலை அவர்களுடைய ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர்கள் தவறை சரிசெய்யுவும் விரும்பவில்லை என்று விமர்சனம் செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பகுஜன் சமாஜ் தனியாகவே போட்டியிடும் என அறிவித்தார். 

பா.ஜனதாவை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதிதிட்டம் தீட்டுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.  மாயாவதியின் இந்த அறிவிப்பு 2019 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்நது பேசிய மாயாவதி சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. காங்கிரசிலுள்ள பிற தலைவர்களையே குற்றம்சாட்டினார்.