திமுக மற்றும்  காங்கிரஸ் கட்சிகளின் மீது இலங்கை போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் மாலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்றுப் போசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்ததுபோல் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை. எல்லா துறைகளிலும் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க.வை பொறுத்தவரையில் அங்கு குடும்ப சண்டை நடக்கிறது. தி.மு.க. ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி போல் செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்..ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை ஒழித்துவிட வேண்டும் எனவும், இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்றும் தி.மு.க. முயற்சி செய்தது. ஆனால் தற்போது நான் முதலமைச்சராக  பொறுப்பேற்று ஒரு வருடம் 7 மாதம் ஆகியும் ஒன்றும் செய்யமுடியவில்லை என கிண்டலாக கூறினார்.

தற்போது ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத்திய பாஜகவுடன்  இணக்கமாக இருக்கிறோம். அவ்வாறு இருந்தால் தான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆனால் பாஜகவுடன் ஒரு நாளும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் ஆளுக்கொருவர் ஒரு கட்சியை தொடங்கி வருகின்றனர். ஜெயலலிதாவை கவனிப்பதற்காக சசிகலா உள்ளே வந்தார். நாம் எல்லாம் உழைப்பாலே கட்சிக்கு வந்தோம். ஆனால் டி.டி.வி.தினகரன் குறுக்கு வழியில் உள்ளே நுழைந்தார். அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்தே நீக்கி விட்டார்கள்.கட்சியில் இருந்து நீக்கி 10 ஆண்டுகள் ஆகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் ஒரு கட்சியை தொடங்கி நான் தான் அ.தி.மு.க. என்று கூறுகிறார். அப்போது நாம் எல்லாம் யாரு?. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.