அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணி பேச்சவார்த்தையை திமுக - காங்கிரஸ் கட்சிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் போன்றவை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அப்போது தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், திமுக - முஸ்லிம் லீக் கட்சியும் சேர்த்து, 25 தொகுதிகளில் போட்டியிடும் என, ராகுலிடம், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உட்பட, 15 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க, தி.மு.க., முன் வந்துள்ளது. இதில், எட்டு முதல், 10 தொகுதிகளை காங்கிரஸ் எடுத்துக் கொள்ளவும், மீதமுள்ளவற்றை, கூட்டணி கட்சிகளுக்கு உள்ஒதுக்கீடாக அளிக்கவும், கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட ராகுல் காந்தி காங்கிரஸ் , கூட்டணியில் இடம் பெற, பாமக  விரும்புகிறது என தெரிவித்துள்ளார். அக்கட்சியையும் சேர்த்தால், நம் கூட்டணி வலுவானதாக அமையும்  என்று ராகுல் கூறியிருக்கிறார்.

இதற்கு  பாகமவை கூட்டணியில் சேர்க்க தேவையில்லை என உடனிருந்த , முன்னாள் மத்திய அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்..

ஜெயலலிதா இருந்தபோது, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில், பாமக தயவு இன்றி, திமுக - காங்., கூட்டணி, அதிமுகவைவிட  அதிக சதவீத வாக்குளைப் பெற்றுள்ளது என்றும், அதனால் அவர்களது தயவு நமது கூட்டணிக்கு தேவையில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் பாமகவை கூட்டணியில் சேர்த்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிக ஓட்டு பெற்ற தொகுதிகளை, அக்கட்சி கேட்கும் என்று, காரணம் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு பாமகவை உள்ளே கொண்டு வர திமுக பொருளாளர் துரை முருகன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.