மறைந்த திமுக நிர்வாகி ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை காலை ஆளுநர் மளிகையில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆளுநர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் டி.ஆர்.பாலுவை அழைத்துக்கொண்டு ஆளுநரை சந்திக்க சென்றதாகவும் ஸ்டாலின் கூறினார்.

அங்கு திமுகவின் போராட்டத்தை பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் விளக்கமாக கேட்டதாகவும், அமித்ஷாவின் கருத்து தவறாக செய்தி வந்துள்ளது, இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை என்றும் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். இதையடுத்தே கலந்துபேசி போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக்கொண்டதாகவும் சில ஊடகங்கள் திட்டமிட்டு திரித்துக்கூறி வருகின்றன ஆனால் திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் பேசினார் ஸ்டாலின்.