கனமழையையும் பொருட்படுத்தாமல் செம்பரபாக்கம் ஏரியின் தற்போதைய நிலைகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். 

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது, காற்றின் வேகம் 155 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல்வர் பழனிசாமி வருகை தந்துள்ளார். ஏரியின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். தனையடுத்து, வில்லிவாக்கம் உட்பட மேலும் சில பகுதிகளை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும், நிவாரண முகாம்களையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு  செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.