பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி அரசில், கழிவறை கட்டியதில் பலகோடி மோசடி நடந்துள்ளது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த நிதிஷ்குமார் அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக முதல்வரானார்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, ராஷ்ட்ரியா ஜனதா தளம் கட்சியின் ஆதரவை விலக்கிவிட்டு, பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்துள்ளார்.

தன்னுடைய ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை. ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்று முதல்வர் நிதிஷ்குமார் பேசி வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் பாட்னாவில், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, ஆளும் அரசு கழிவறைகளைக் கட்டி வருகிறது. இதில் அரசு அதிகாரிகள் சிலர், தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து கழிவறை கட்டியதில் ரூ.13.50 கோடி ஊழல் செய்துள்ளது சமீபத்தில் வெளியானது. ஆனால், இதை பீகார் அரசு மறுத்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் டுவிட்டரில் நிதிஷ்குமாரை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது-

நான் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கி இருந்தபோது, மக்கள் என்னை திட்டியதுபோல், இப்போது நிதிஷ்குமாரையும் திட்டுவார்களா. மாட்டுத்தீவின ஊழலின் போது, லாலுபிரசாத் தீவனத்தை தின்றுவிட்டார் என்று பேசினார்கள். இப்போது நிதிஷ்குமார் கழிவறை ஊழலில் சிக்கியுள்ளார். அவரை எதைசாப்பிட்டார் என்று மக்கள் பேசுவார்கள்?

இவ்வாறு அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.