nithyananda traying to capture madurai athinam properties case enquired in madurai high court

மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான எக்கச்சக்க சொத்துகளை கைப்பற்றுவதற்காக நித்தியானந்தா முயற்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வரும் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், வரும் டிசம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாகவும், அதுவரை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் கூறினர். 

மதுரையில் உள்ள பாரம்பரிய மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனகர்த்தராக இருந்து வருகிறார் அருணகிரிநாதர். கடந்த 2012ஆம் ஆண்டு இந்த மடத்தின் 293வது மடாதிபதியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டார். அவரது இந்த நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நித்யானந்தா, ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதி உடையவர் அல்லர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தா வெளியேற்றப்பட்டார். அவர் மடத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில், நித்தியானந்தா சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு பூஜை செய்ய உரிமை உண்டு என்று கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மதுரை ஆதீனம் மடத்தின் மடாதிபதியாக நியமனம் செய்வதற்கு அனைத்து தகுதிகளும் எனக்குள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனமாகக் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முறைப்படி நியமனம் செய்யப்பட்டேன். என்னைப் பதவி நீக்கம் செய்ய மடத்தின் தலைவர் உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதனால் எனது நியமனம் ரத்து செய்யப்பட்டது செல்லாது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆதீனம் மடத்துக்குள் நுழைய எனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்’ என நித்தியானந்தா தனது மனுவில் கூறியிருந்தார் .

இதனிடையே மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீன மடத்தையும், அதன் விலை மதிப்பில்லா சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் மடத்திற்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை மடத்துக்குள் நுழைவதற்கு அனுமதித்தால் தேவையற்ற சர்ச்சைகளும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படும். எனவே அவர் மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந் நிலையில் இன்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

வழக்கின் இறுதி விசாரணைக்காகவும், தீர்ப்புக்காகவும் வரும் 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிபதி மகாதேவன் தெரிவித்தார். அதுவரை நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் கூறினார்.