மகாராஷ்ட்ராவில் தற்போது பிஜேபி –சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 தேர்தலில் பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா இருந்தது.

 

ஆனால் அண்மைக்காலமாக பாஜக –சிவசேனா கட்சிகள் இடையே கெடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த ஆண்டுடன்  பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவடைகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தான் உள்ளது.

 

ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி சென்றுள்ளது.மேலும் கடைசியாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டது.

 

மேலும் அதன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து வருகிறது. தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துள்ளது. இதையடுத்து சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டு உள்ளது.

இந்தநிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவத் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவின் நிலை என்ன என்பதைக் குறித்து பேசினார்.

 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் போல இல்லாமல், இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. அவர்களுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

வரும் மக்களவை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு மக்களவை தான் ஏற்படும். அப்பொழுது பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை முன்னிறுத்த வேண்டும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நாங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.