உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை மேலாண்மை செய்ய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வாக்கியம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்பதை காரணம் காட்டி மத்திய அரசு தட்டி கழித்து வருகிறது.

தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என உறுதியளித்தார்.