தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நிதியமைச்சர் ஒருவர் இந்திய அரசின் பட்ஜெட்டை இரண்டாம் முறையாக நாளை தாக்கல் செய்ய இருக்கிறார். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் ஜேஎன்யுவில் பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டார். 2003 முதல் 2005 ஆண்டு வரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

2008ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவரை தேசிய செயற்குழு உறுப்பினராக அக்கட்சி நியமித்தது. பின் 2010ம் ஆண்டு பாஜகவின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவருக்கு 2014ம் ஆண்டு முதன்முதலாக மோடி அரசு பதவி ஏற்றபோது வர்த்தகத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2017ம் ஆண்டில் நாட்டின் மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறையை நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதுமுதல் அவரது முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது.

பின் இரண்டாம் முறையாக கடந்த ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றபோது நிர்மலா சீதாராமனுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பிற்குரியது என்னவெனில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு பெண் ஒருவர் நிதியமைச்சர் ஆகியிருக்கும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். நிதியமைச்சரான பிறகு முதல் முறையாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய அரசின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது மீண்டும் நாளை தனது இரண்டாவது பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய இருக்கிறார். மத்திய அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!