கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக செயல்பட தூண்டிய பேராசிரியை நிர்மலா தேவி இந்த செயலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் 2 பேரின் பெயர்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது.

அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து இருந்தது. உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேரம் பேசியது தெரியவந்தது. 

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமனம் செய்யப்பட்டார். 

இதற்கிடையே  இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் அருப்புக்கோட்டையை அடுத்த திருச்சிழியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் துறைத் தலைவர் முருகன் என்பவரும் தன்னை இந்த செயலுக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த இருவர் குறித்த தகவல்கள் மட்டும் வெளியிகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து இப்பிரச்சனையில் தொடர்புடையவர்கள் லிஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இருவருக்கும் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும்  தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.