மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி வீடுகளையும் உடைமைகளையும் இழந்த 5,000க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மீட்புப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்துக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மாவட்டத்தில் சேதமடைந்துள்ள உட்கட்டமைப்புகளின் முழுமையான சீரமைப்புக்குத் தேவையான நிதி குறித்த முன்மொழிவுகளை உருவாக்கி, மத்திய அரசுக்கு அனுப்பவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.