தமிழரின் நாகரிகத்தையும், வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றின் அடையாளத்தை ஆதாரத்தோடு நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறது கீழடி. வைகைநதி நாகரீகம் இங்கே இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். தமிழ்க்குடி மூத்த குடி என்பதற்கான அடையாளம் கீழடி நமக்கு தந்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம்கட்ட அகழாய்வு தொடங்கி பணிகள் நடைபெற்றுவந்தது.  கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களுக்கு பின்பாக கடந்த மே-19ஆம் தேதி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது.

அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கீழடியில் விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு என்பது தொடர்பாக தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

6ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளைமாட்டின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வைகை நதி நகர நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண் தொழிலை பிரதானமாக செய்துவந்துள்ளதற்கு ஆதரமாக அமைந்துள்ளது.

இதனிடையே 2200 ஆண்டுகளுக்கு முந்தைய இடுகாட்டு பகுதியாக கருதக்கூடிய கொந்தகை பகுதியில் நடைபெறும் அகழாய்வில் மனித எலும்புகூடுகளும், பழங்கால விலங்கின் எலும்புக்கூடுகள், வித்தியாசமான முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.