பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிவரும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த முறை நல்ல வரவேற்பு கிடைத்ததால், சீசன் 2 தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சிக்கு கடந்த முறையே பல எதிர்ப்புகள் கிளம்பியபோதும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. சீசன் 2ற்கும் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இதுவரை பல பிரச்னைகளையும் கடந்து தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒருநாளைக்கு 400 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். ஆனால் அவர்களில் 40 பேர் மட்டும்தான் ஃபெஃப்சி தொழிலாளர்கள். வெளிமாநிலத்தவர்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர் எனக்கூறி ஃபெஃப்சி சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம்சாட்டினார். அதனால் சின்னத்திரை படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக எச்சரித்தார். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டு, பிக்பாஸ் சீசன் 2 தொடர்ந்து நடந்துவருகிறது. 

குழந்தைகளுடன் பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல நேரங்களில் ஆபாசமாக பேசப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசுவதால் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிவரும் தொலைக்காட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்தை இன்று முற்றுகையிட உள்ளனர்.