டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் கட்சி தலைவராக அன்புமணியை நியமிக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
சென்னை: டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் கட்சி தலைவராக அன்புமணியை நியமிக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது பாமக. 1989ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பாமகவை உருவாக்கினார் டாக்டர் ராமதாஸ். அப்போது கட்சியின் நிறுவனராக ராமதாசும், தலைவராக பேராசிரியர் தீரனும் பொறுப்பேற்றனர்.
அதன் பின்னர் கால சக்கரங்கள் சுழல… ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எதிரொலியாக பேராசிரியர் தீரன் கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் பாமக தலைவராக நியமிக்கப்பட்டவர் கோ.க. மணி என்னும் ஜிகே மணி. இன்று வரை பாமகவின் தலைவர் பொறுப்பை சுமந்து வருகிறார்.

கட்சிக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்து கட்சியை வளர்த்ததில் அவரின் பங்கும் முக்கியமானது. இந்த பதவியில் அவர் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார்.
தற்போது கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஜிகே மணியும் ஒருவர். கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், அரசியல் நிலைப்பாடு, கூட்டணி விவகாரங்களில் அவரின் பங்களிப்பும் அளவில்லாதது.

இந் நிலையில், 22 வருடங்களாக கட்சியின் தலைவராக இருக்கும் ஜிகே மணியிடம் இருக்கும் பாமக தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு வழங்கலாம் என்ற ஆலோசனை தைலாபுரம் தோட்டத்தில் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து தான் போட்டியிட்டது. ஆனாலும் தேர்தல் நடத்தப்பட்ட 9 மாவட்டங்களில் பாமக பெரிதளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வன்னியர்கள் அதிகம் வாழும், பாமக செல்வாக்குள்ள பகுதிகளாகும்.

அப்படி இருந்தும் திருப்திகரமான வெற்றியை ஈட்டமுடியவில்லை என்ற வருத்தம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு ஏற்பட அதன் வெளிப்பாடு தான் கூட்டங்களில் பாமகவினரை கடிந்து கொண்ட சம்பவங்கள். கூட்டணி என்றாலே காலை வாருவது தான், பாமக தனித்து போட்டி என்றும் அவர் பேசினார்.
டாக்டர் ராமதாஸின் பேச்சை இன்னமும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தீர விவாதித்துக் கொண்டு இருந்தாலும், கட்சிக்குள் வேறு ஒரு முக்கிய விஷயம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
கட்சி இப்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டிய சூழலில் இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் அன்புமணியை 2ம் கட்ட தலைவராகவே வைத்து இருப்பது. இளைஞரணியை தாண்டி அன்புமணிக்கு கட்சியில் பதவி இல்லை.

எனவே அன்புமணிக்கு பாமக தலைவர் பொறுப்பை அளித்தால் கட்சியின் நகர்வும், இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் என்று டாக்டர் ராமதாசிடம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி உள்ளனராம்.
அதன் பிறகு, கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் நேரிடையாகவே பாமக தலைவர் ஜிகே மணியை சந்தித்து இந்த விவரத்தை தெரியப்படுத்தி இருக்கின்றனர். அவரும் இன்முகத்துடன் தலைவர் பதவியை விட்டு தருவதாக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நிலைமைகள் இப்படி இருக்க… வரும் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது. இந்த குழுவில் பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினருடன் கலந்து பேசும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றனவாம்.
இந்த தகவல்கள் அனைத்தும் அப்படியே தொண்டர்கள் மத்தியில் உலாவ, அவர்கள் ஏக குஷியில் வலம் வர ஆரம்பித்துள்ளனர். வரும் 2022ம் ஆண்டு பாமகவின் அடுத்த அரசியல் நடவடிக்கைகள் அன்புமணி ராமதாஸ் மூலம் நகரும் என்றும், இளைஞரணியினரும் குஷியில் உள்ளனராம். ஆக மொத்தம் வரும் 29ம் தேதிக்காக பாமக தொண்டர்கள் இப்போது முதலே தயாராகி வருகின்றனர்…!!
