இஸ்ரேல்-ஈரான் மோதல்..! சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்..! தவிக்கும் இந்தியா..!
தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில சமூக விரோதிகள் எல்பிஜி சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பதும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முடங்கிய கப்பல் போக்குவரத்து
மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஈரான் இடையே மூண்டுள்ள போர், இன்று இருபது நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அதன் வெப்பம் உலக நாடுகளின் சமையலறைகளை எட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா உட்பட உலகெங்கும் எல்பிஜி தட்டுப்பாடு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
வழக்கமாக நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக, கடந்த இருபது நாட்களில் வெறும் ஒன்பது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றுள்ளன. இது விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முறிவைக் காட்டுகிறது. பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா நிலைமையின் தீவிரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். எல்பிஜி கையிருப்பு மற்றும் விநியோகம் தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், நிலைமையைச் சீர்செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீதியை தவிர்க்க வேண்டுகோள்
நிலைமை இக்கட்டாக இருந்தாலும், உள்நாட்டு நுகர்வோருக்கு 100% விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. தொடக்கத்தில் நிலவிய ஒருவித பீதி கலந்த முன்பதிவுகள் தற்போது குறைந்துள்ளன. இருப்பினும், வதந்திகளை நம்பி மக்கள் சிலிண்டர்களைக் குவித்து வைக்க வேண்டாம். தேவைக்கேற்ப மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
முடிந்தவரை மாற்று எரிசக்தி விருப்பங்களை (மின்சார அடுப்பு போன்றவை) பரிசீலிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சந்தை மீதான இரும்புக்கரம்
தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில சமூக விரோதிகள் எல்பிஜி சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பதும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஒடுக்க அரசு நாடு முழுவதும் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. பொதுமக்களுக்குச் சேர வேண்டிய எரிவாயு தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த ஒடுக்குமுறையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. தற்போதைய சூழலில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போது உள்நாட்டு உற்பத்தி 40% என்ற அளவை எட்டியுள்ளது. இது எதிர்காலத்தில் வெளிநாட்டுச் சூழல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவும் ஒரு நீண்டகாலத் திட்டமாகும்.
இராஜதந்திர முயற்சிகள்
வளைகுடாப் பகுதியில் சுமார் 22 இந்தியக் கப்பல்களும், அதில் பணிபுரியும் மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ராகேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி அவர்கள் ஓரிடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், உயிரிழப்புகள் குறித்த செய்திகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. மார்ச் 18 அன்று ரியாத்தில் நடந்த தாக்குதலில் ஒரு இந்தியர் பலியானதை அடுத்து, இந்த மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூடுதல் செயலாளர் அஸீம் மகாஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களுடனும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் போன்ற உலகத் தலைவர்களுடனும் பேசி வருகிறார். அமைதி மற்றும் இராஜதந்திரத் தீர்வு ஒன்றே இந்தப் பொருளாதார, உயிரிழப்பு பாதிப்புகளைத் தடுக்கும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
