மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பொதுக் கூட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என  மக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கமல் இதனை அறிவித்தார்.

அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்,  குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி பாடுபடும் என தெரிவித்த கமல், இலவசங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என கூறினார்.

முன்னதாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்துக்குச் சென்ற கமலஹாசன், அவரின் சகோதரர் முத்து மீரான் மரைக்காரயரிடம் ஆசி பெற்றார். கலாம்  குடும்பத்தினர் கமல் அரசியலில் வெற்றிபெற சிறப்புத் தொழுகை செய்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி திராவிடம் மற்றும் தேசியத்தைச் சார்ந்தே செயல்படும் என்றும் கமல் தெரிவித்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசன்,விமான நிலையத்தில் செய்தியாள்களிடம் பேசினார். அப்போது வரும் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என தெரிவித்தார்.

மார்ச்  மாதம் திட்டமிட்டபடி திண்டுக்கல், சிவகங்கை, பரமக்குடியில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தமிழக அரசு இன்று நடத்திய  அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்காததற்கு சட்ட சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மக்கள் பிரச்னைக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.