சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காக்கிறார். பஞ்சாப்பில் நடந்ததை ஆதரிக்கிறீர்களா என்று ஸ்டாலினிடம் கேட்க விரும்புகிறேன். அவர் மவுனமாக இருப்பது பஞ்சாப் அரசின் சூழ்ச்சிக்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படும்.

பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் பஞ்சாப் அரசின் செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என எம்.பி.தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூரில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்து எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் பதிண்டா விமானத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டியது மேக மூட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. எனவே சாலை வழியாகச் சென்ற பிரதமர் ஒரு மேம்பாலத்தில் விவசாயிகளின் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இருபது நிமிடங்கள் பிரதமரின் கார் ஒரு மேம்பாலத்தில் தவித்த நிலையில் அதன்பின் திரும்பிச் சென்றுவிட்டார் பிரதமர். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக இளைஞரணி சார்பில் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் சென்னை தங்க சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், தேசிய இளைஞரணி தலைவர் எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, வினோஜ் செல்வம், பொன்,ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தேஜஸ்வி சூர்யா பேசுகையில்:-பிரதமர் பதவி என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது.

ஏற்கனவே நாம் இரு பிரதமர்களை இழந்துள்ளோம். பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் செயலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 

பஞ்சாப் சம்பவத்திற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காக்கிறார். பஞ்சாப்பில் நடந்ததை ஆதரிக்கிறீர்களா என்று ஸ்டாலினிடம் கேட்க விரும்புகிறேன். அவர் மவுனமாக இருப்பது பஞ்சாப் அரசின் சூழ்ச்சிக்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படும். தமிழகத்தில் 5 ஆண்டில் பாஜக ஆட்சி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.