Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை? "கெடு" முடியட்டும் என்று காத்திருக்கும் தமிழக முதல்வர்...

Next action in Cauvery case Tamil Nadu Chief Minister waiting for time
Next action in Cauvery case Tamil Nadu Chief Minister waiting for time
Author
First Published Mar 29, 2018, 10:13 AM IST


சேலம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னரே மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25-ஆம் தேதி சேலம் - சென்னை விமான சேவையை தொடங்கி வைத்தார். 26-ஆம் தேதி கோவையில் 86 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததுடன், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பாலம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேற்று முன்தினம் சொந்த தொகுதியான எடப்பாடியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தொடங்கி வைத்தார். அன்றிரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். 

மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று காலை 11 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டு சென்றார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் ‘காலக் கெடு‘ முடியப் போகிறது. எனவே, ஆறு வார காலம் முடிந்த பின்னர்தான் எதையும் சொல்ல முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா? என்று மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னரே மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதேவேளையில் நிச்சயம் நல்லதொரு முடிவை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். 

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு. எனவே, அதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் என்றே எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios