ஊரக உள்ளாட்சி தேர்தலில் இப்படி தி.மு.க. எகிறி அடிக்கும்! என்று சத்தியமாக அ.தி.மு.க. நினைக்கவே இல்லை. மிகப்பெரிய நம்பிக்கையோடுதான் இருந்தார்கள். தேர்தலை முறையாக நடத்த வேண்டும்! எனும் கோரிக்கையோடு ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து நீதிமன்றத்தை நாடியபோதும் கூட ‘பயந்து போய் தேர்தலை நிறுத்த துடிக்கிறார்கள்’ என்றுதான் பரிகாசம் செய்தது அ.தி.மு.க. ஆனால், தேர்தல் ரிசல்டை பார்த்தால் கிட்டத்தட்ட தலை கீழாக இருக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் சில முறைகேடுகள், வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளரை அறிவிக்காமல் கால தாமதம் செய்கின்றனர்! என்று பல புகார்களை சொல்லியபடி நள்ளிரவிலும்  மாநில தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டினார் ஸ்டாலின். வெளியே வந்தவர் ‘ஜனநாயக படுகொலை நடக்கிறது! மக்கள் மிக முழுமையாக எங்களை  ஆதரிக்கிறார்கள், இந்த ஆட்சியை வெறுக்கிறார்கள். ஆனால் ஆளும் தரப்போ  வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்து ஜெயிக்கிறது!’ என்று பேட்டி தட்டினார். 


இந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிர்பாட்டு பாடியிருக்கிறது அ.தி.மு.க. தரப்பு. மாஜி அமைச்சரான பொன்னையன்...”பொது மக்களின் நலனை கருதி அ.தி.மு.க. அரசாங்கமானது விரைந்து உள்ளாட்சி  தேர்தலை நடத்தியது (ஓஹோ). ஆனால் வெற்றி கிடைக்காது என்கிற பயத்தினால், நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த விடாமல் தடுக்க தி.மு.க. முயற்சித்தது. ஆனால் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன. நீதிமன்ற அனுமதியுடன் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்கிறார் ஸ்டாலின். தேர்தல் ஆணையம் மீது பழி சுமத்துகிறார். தேர்தல் ஆணையம் மிக நேர்மையுடன் செயலாற்றி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆட்சியின் போது, ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது கடும் வன்முறையானது கட்டவிழ்த்து விடப்பட்டது. கொடூரமாக தி.மு.க.வினரால் அன்று அ.தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர். நீதிபதியே இதை வன்மையாக கண்டித்து, சென்னை மாநகராட்சி தேர்தல் முடிவுகளை ரத்து செய்தார். இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?


ஆனால் எங்கள் ஆட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் பேணும் ஆட்சியாகவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் ஆட்சியாகவும், முதல்வர் இ.பி.எஸ். தலைமையில் நடக்கிறது. இந்த நல்லாட்சியை அகில இந்தியாவும் பாராட்டுகிறது. ஓட்டுக்களை பிரித்து எண்ண காலதாமதாகதான் செய்யும், ஆனால் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதாலேயே ஸ்டாலின் பதறிப் பதறி குற்றம்சாட்டுகிறார்.” என்று பொங்கியிருக்கிறார். தலைவரே! அதெல்லாம் சரி....மக்கள் நலன் போற்றும், அகில இந்தியாவும் பாராட்டும் அரசாங்கமா இருந்தால் ஏன் இவ்வளவு சறுக்கல்கள் உள்ளாட்சி தேர்தல்ல?! என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வி. 
பதில் சொல்லுங்க பாஸ்!