எடப்பாடி முதலமைச்சராக இருந்தாலும் அதிமுக என் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று கூறித்தான் தனது அணியை அதிமுகவுடன் இணைத்திருந்தார் ஓபிஎஸ்

அதிமுக ஒன்றாக இணைந்த பிறகும் கூட ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி நீடித்துக் கொண்டிருந்தது. ஏன் இப்போதும் நீடிக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் யாருக்கு கட்சியிலும் சரி, ஆட்சியிலும் அதிகாரம் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டால், அதற்கு எடப்பாடியாருக்குத்தான் என்று கூறும் அளவிற்கு அவருடைய செயல்கள் இருக்கின்றன. அதோடு அமைச்சர்கள் அனைவரும் எடப்பாடியாரின் பின்னால் அணிவகுக்கின்றனர்.

மாவட்டச் செயலாளர்களும் கூட எடப்பாடியார் தான் என்று முடிவெடுத்துவிட்டனர். துவக்கத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட இப்போது எடப்பாடியாரிடம் சரண்டர் அடைந்துவிட்டனர். இதற்கு காரணம் டெல்லியில் எடப்பாடியார் உருவாக்கி வைத்துள்ள செல்வாக்கு. நினைத்த நேரத்தில் எடப்பாடியார் மோடி, அமித் ஷா என அதிகாரத்தில் உள்ளவர்களை சந்திக்கிறார்.

அதே போல் அவர்களும் எடப்பாடியுடன் நல்ல உறவில் உள்ளனர். இதனால் தான் எடப்பாடியாரின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து தற்போது உச்சத்தில் உள்ளது. இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகு அதிமுக என்றால் எடப்பாடி என்கிற நிலைமை வந்துவிட்டது என்றே பேசப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கூட திமுகவிற்கு சமமாக வெற்றிகளை குவித்து தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை எடப்பாடியார் நிலைநிறுத்தியுள்ளதாகவே சொல்கிறார்கள்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று காலையிலேயே எடப்பாடியாரை சென்று சந்தித்துள்ளார் ஓபிஎஸ். இதுநாள் வரை இப்படி ஒரு சந்திப்பை ஓபிஎஸ் நிகழ்த்தியது இல்லை. கடைசியாக முதலமைச்சர் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு மரியாதை நிமித்தமாக சென்று வந்தார். ஆனால் புத்தாண்டு அன்று எடப்பாடியாரை, ஓபிஎஸ் அவரது வீடு தேடிச் சென்று சந்தித்தது அதிமுகவில் பல்வேறு ஹேஸ்யங்களை எழுப்பியது. பொதுவாக இதுபோன்ற தருணங்களில் உயர் பொறுப்பில் உள்ளவர்களை அடுத்த நிலைகளில் உள்ளவர்கள் சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் எடப்பாடியார் உயர் பொறுப்பில் உள்ளார் என்பதை ஒப்புக் கொண்டு ஓபிஎஸ் அவரை சென்று சந்தித்துள்ளாரா என்கிற கேள்வி எழுகிறது. இதனை மெய்படுத்தும் வகையில் அன்றைய தினம் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளும் எடப்பாடியாரை வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளனர்.