திமுகவை பொறுத்தவரை வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் செலவு செய்ய வேண்டும் என்றிருந்த விதியை மாற்றி இந்த தேர்தலில் எப்படியும் வென்றே ஆக வேண்டும் என்பதால் மு.க.ஸ்டாலின் தாராளம் காட்ட முடிவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரம் காதுகடிக்கிறது. 
 
திமுகவில் போட்டியிடும் மக்களவை தொகுதிக்கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். வழக்கமாக, திமுகவில் சீட் பெற வேண்டுமானால் தொண்டர்கள் ஆதரவையும் தாண்டி பண பலம் இருக்க வேண்டும். தலைமையில் இருந்து, ஓரளவுக்கு மட்டுமே உதவி செய்யப்படுவதே நடைமுறையாக இருந்து வந்தது. பல இடங்களில் முன்னாள் அல்லது இன்னாள் பதவி வகிப்பவர்களின் தலையில் தேர்தல் செலவுகள் சென்று சேரும். 

ஆனால், மக்களவை தேர்தலை தனது தலைமையிலான கூட்டணி முதல்முறையாக சந்திக்க உள்ள நிலையில், வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுக. அத்தோடு இடைத்தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்கிற நோக்கத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலில் இன்னும் தாராளமாக செலவு செய்ய கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு தாராளமாக நிதியுதவி செய்ய உத்தரவிட்டு இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.

இந்த நிதி முன்பே அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் போய் சேர்க்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படு உற்சாகத்தில் இருக்கின்றனர் கழக உடன்பிறப்புகள்.