அமமுகவை பெயரை யாராவது பயன்படுத்தினால் சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என புகழேந்தி கூறியுள்ளது டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்திக்கும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். அவ்வப்போது டி.டி.வி.தினகரன் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

இந்நிலையில் அமமுக அதிருப்தியாளர்களின் தஞ்சை மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மண்டலங்களிலிருந்தும் அமமுக அதிருப்தியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஓ.பி.எஸ். தமிழகம் வந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவேன் என தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 80 சதவீத இடங்களில் வெற்றி பெறும். இதற்காக நாங்கள் பட்டி, தொட்டியெங்கும் சென்று தீவிர பிரசாரம் செய்வோம். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு டி.டி.வி. தினகரனின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும். 


 
மேலும், அமமுகவை கலைத்து விட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுக தொடர்ந்து கட்சியை நடத்தினால் வழக்கு தொடருவோம். கட்சியை நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். எங்களைக் கேட்காமல் அமமுகவை அங்கீகரிக்க கூடாது. அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்லச் சொன்னார். அதனால்தான் பொய் சொன்னோம் என புகழேந்தி கூறியுள்ளார். சிறையில் உள்ள சசிகலா நாள்தோறும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார். சிறை தண்டனை முடிவடைந்ததும் சசிகலா அதிமுகவுக்கு வருவது அவரது விருப்பம் என்றார்.