புரட்சிமலர் தீபா பேரவை… ஜெயலலிதாவின் அண்ணன் மகளை ஆதரித்து மற்றுமொரு இயக்கம்…

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அரசு மற்றும் கட்சி பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரித்து வருவதாகவும், அடிமட்டத் தொண்டர்களிடையே ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா தான் அதிமுக வின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என கருத்து நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தீபா வசித்து வரும் சென்னை தியாகராய நகர் வீட்டை நாள்தோறும் முற்றுகையிட்டு வரும் தொண்டர்கள் உடனடியாக தீபா அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சேலத்தைச் சேர்ந்த தொண்டர்கள் தீபா பேரவை தொடங்கி அதில் 25 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜெ., அண்ணன் மகளை ஆதரித்து 'புரட்சிமலர் தீபா பேரவை' உதயமாகி உள்ளது.

புரட்சி மலர் தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஜகுபர் உசேன்.இதற்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கராஜன், முரளி, எம்.ஜி.ஆர்.வல்லரசு ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் அம்மா ஜெ.தீபா பேரவையை உருவாக்கி, உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக படிவங்கள் அச்சிட்டு நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கும் வினியோகம் செய்து வருகின்றனர். இதில் பெண்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.

நத்தம் நகர், பண்ணுவார்பட்டி பகுதிகள், குட்டுப்பட்டியில்  சாணார்பட்டி.மேட்டுக்கடை, கொசவபட்டி உள்ளிட்ட  பகுதிகளில் தீபாவை ஆதரித்து பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சேலத்தில் உருவான, 'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை'க்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், 21 மாவட்டங்களுக்கு  பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.